Friday, March 23, 2012

'கர்ணன்' again!


தூள் கிளப்பும் 'கர்ணன்'
Posted Date : 20:03 (21/03/2012)Last updated : 20:03 (21/03/2012)
- பானுமதி அருணாசலம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை டி.வி.-யில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ இதுவரை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது.

காலையில் கிளம்பி தியேட்டருக்கு சென்றபோது அங்கு ஓடிய புதுப்படங்களுக்கு ஈடாக டிக்கெட் கவுன்டரில் கூட்டம். தள்ளாடும் வயதினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிகளவில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டரில் உட்கார்ந்த போது கொஞ்ச கொஞ்சமாக இருக்கைகள் நிரம்ப துவங்கின. முன் இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் தாம் அந்த காலத்தில் 'கர்ணன்' படத்தை பார்த்தது பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள்.படம் ஆரம்பித்தபோது திரையரங்கம் நிறைந்திருந்தது.

சிவாஜி முதலில் வந்த காட்சிக்கு அத்தனை விசில், கைத்தட்டல்கள். படம் ஓட ஆரம்பித்து இருபது நிமிடங்கள் ஆகியும் சில இளைஞர்கள் இருட்டில் இருக்கைகளைத் தேடி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

நட்பு, காதல், வீரம், பாசம், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்தது படத்தில். சிவாஜியும், சாவித்திரியும் வரும் காட்சிகள் அவ்வளவு சுவாரசியம். நகைச்சுவை கலந்த வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இன்றைய திரைப்படங்களில் சொல்லப்படும் 'டைமிங்' நக்கல் அனைத்தும் 'கர்ணன்' படத்தில் இடம்பெற்றிருந்தது. சிவாஜியின் நுணுக்கமான முகபாவங்களுக்கு, வசன உச்சரிப்புக்கு, கைத் தட்டாமல் இருக்க முடியவில்லை.

அசோகனிடம் நட்பைப் பற்றி பேசும்போதும், தேவிகாவிடம் காதலில் மயங்கும் போதும், கண்ணனாக வரும் என்.டி.ராமாராவிடம் வில்லங்கமாக பேசும்போதும் சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களை சிவாஜி பேசும்போது ஆர்பரிக்கிறது கூட்டம். தியேட்டர் முழுவதும் ஆரவாரம்.

'நிலவும் மலரும் மலரட்டுமே' என கண்ணதாசனின் கற்பனையை, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் - அதுவும் டிஜிட்டல் சவுண்டில் - கேட்கும் போது காதுக்கு மட்டுமல்ல மனதிற்கும் அவ்வளவு இனிமையாக இருந்தது.

'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது' என்னும் பாடல், படம் பார்த்தவர்களின் உள்ளத்தை உருகச்செய்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

தனது மாமனார் தன்னை அவமானப்படுத்தும் காட்சியில் வசனம் இல்லாமல் வெறும் நடிப்பால் பதிலடி கொடுக்கும் காட்சியில்
சிவாஜி சிவாஜி தான்.

அந்த காலத்தில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம், இன்றைய தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது இன்னும் மிக பிரம்மாண்டமாக திரையில் தெரிகிறது.

என்னதான் பீசா, பர்கர்ன்னு சாப்பிட்டு வேஷம் போட்டு திரிந்தாலும், இட்லிக்கு சாம்பார், சட்னியுடன் சாப்பிடும் திருப்திக்கு ஈடு இணையே இல்லை. அதைப் போலத்தான் இந்த படமும். 'நம்ம' படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் அற்புதமான படத்தை பார்த்த திருப்தி. படம் முடிந்து வெளியில் வரும்போது 'இது மாதிரி வரலாற்று சிறப்பு மிக்க படங்கள் மறு வெளியீடு செஞ்சா நல்லா இருக்குமே...’ என ஒரு இளைஞர்கள் கூட்டம் பேசிக் கொண்டு போனதை கேட்க முடிந்தது.

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப உதவியுடன் நல்ல படமாக எடுத்து வெளியிட்டால் ரசனை ஆரோக்கியமானதாக இருக்கும்.. முடியாவிட்டால், அட்லீஸ்ட் ஏற்கனவே வந்த நல்ல படத்தை தொழில்நுட்ப உதவியுடன் மறுவெளியீடாவது செய்யலாமே.. கர்ணனைப் போல!