'காமன் மேன்' கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்! - சிறப்பு பகிர்வு
காட்சி ஒன்று:
அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டு நாற்பது வருடங்கள் இருக்கும் : இந்தியாவின் கடைக்கோடி குடிமகன்களில் ஒருவரான எளிய மனிதர் உள்ளே வருவார். அது நிலவுக்கான பயணத்தைப் பற்றி ஆய்வு செய்யும் கூடம். உள்ளே அவரை அழைத்து வரும் நபர் இப்படிச் சொல்வார்: ![]() "இவரைத்தான் நிலவுக்கு அனுப்பப்போகிறோம். இவருக்குச் சோறு, தண்ணீர்,வெளிச்சம், காற்று, இருப்பிடம் எதுவும் தேவையில்லை." என்பதாக அது அமைந்திருக்கும். எளிய மனிதனை எப்படி அரசுகள் பார்க்கின்றன என்பதை இதைவிட எளிமையாகச் சொல்லிவிட முடியாது. காட்சி இரண்டு:. மன்மோகன் சிங்கும், நரசிம்ம ராவும் ஒரு சந்தின் நுழைவில் ஓரமா நின்று கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் கையில் விலைவாசி ஏற்றம் என்கிற பெரிய ஆயுதம் இருக்கும். சுவரில் டீசல் விலை, கேஸ் விலை ஏற்றம் என்று போஸ்டர்கள் தொங்கிக்கொண்டு இருக்கும். காமன்மேன் ஓய்ந்து போய் அந்தச் சந்தில் நடந்து வந்து கொண்டிருப்பார். அவரைத் தாக்க மன்மோகன் தயாராக இருப்பார். ராவ் அசையாமல் இப்படிச் சொல்வார் : "அவரின் நிலைமை இன்னமும் மோசமாகக் கூடாது என்று கருணையோடு நாம் இதைச் செய்கிறோம் என்று நிச்சயம் அவர் புரிந்துகொள்வார்." ![]() ஆட்கள் தான் மாறியிருக்கிறார்கள். காட்சிகள் மாறவில்லை அல்லவா? மேலே சொன்ன அந்த இரண்டு கார்ட்டூன்களையும் வரைந்தது ஆர்.கே.லக்ஷ்மண். ஆர்.கே.லக்ஷ்மணின் அந்தக் 'காமன் மேனை' பார்த்து இருக்கிறீர்களா? கோடு போட்ட சட்டை, எளிமையான வேட்டி, சொட்டை விழுந்த தலையில் ஓரிரு முடிகள், எப்பொழுதுமே வாயைத் திறக்காத மவுனம், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், அதிகாரிகள் தரும் அதிர்ச்சிகளை எதிர்கொள்ள எப்பொழுதும் உயர்ந்திருக்கும் புருவம். இது தான் காமன்மேன். இந்தச் சாதாரண மனிதனை கிட்டத்தட்ட அம்பது வருடங்கள் மக்களின் மனசாட்சியாக அவர் உலவ விட்டார். ![]() பையன் பெரிய ஓவியக்காரனாக வருவான் என்று அனைவரும் நம்ப ஆரம்பித்து இருந்தார்கள். உயர்கல்வியை முடித்த பின்னர் ஜே.ஜே. கலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார் லக்ஷ்மண். அந்தக் கல்லூரியின் முதல்வர் கடுகடுப்பான முகத்தோடு "எங்கள் பள்ளியில் சேர வேண்டிய தகுதி உனக்கில்லை தம்பி." என்று அனுப்பி வைத்தார். வீட்டுக்கு திரும்பி நிறைய வருத்தத்தோடு மைசூர் பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனோடு ப்ளிட்ஸ், சுயராஜ்யா இதழ்களுக்கு ஓவியங்கள் வரைந்து அனுப்பினார். தன்னுடைய அண்ணன் ஆர்.கே.நாராயண் 'தி இந்து'வில் எழுதிய கதைகளுக்கும் படங்கள் வரைந்து தள்ளினார். பால் தாக்கரே வேலை பார்த்த ப்ரீ பிரஸ் ஜர்னலில் இவரும் கார்ட்டூனிஸ்டாக இணைந்தார். அங்கே எக்கச்சக்க வேலை வாங்கப்பட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்த்த லக்ஷ்மண் கருத்து மோதல்களால் அந்த இதழை விட்டு வெளியேறினார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைந்தார். முதலில் அவரைச் செய்தித்தாளின் மாலை இணைப்பிதழில் வரைய வைத்தார்கள். ![]() காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களில் மதியம் வரை முழுமையாகத் தன்னைப் பல்வேறு செய்திகளுக்குள் ஈடுபடுத்திக்கொள்வார். பல்வேறு அரசியல் பார்வைகளை உள்வாங்கிக் கொண்ட பின்னர், மக்களின் வலியை எப்படி அங்கதத்தோடு சொல்வது என்று மதிய உணவுக்குப் பின்னர் யோசித்துவிட்டு அவர் கேலிச்சித்திரத்தை தீட்டி முடிக்கையில் சாதாரண மனிதனின் அழுகுரல் நகைச்சுவையோடு கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கும். எந்த அளவுக்கு அவர் அரசியல்வாதிகளை கவனித்தார் என்றால் தேவகவுடா, வி.சி.சுக்லா ஆகியோர் எந்த பாணியில் பேசுவார்களோ அதை அப்படியே மிமிக்ரி செய்கிற அளவுக்கு ஆழமாக அரசியல்வாதிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். அரசியல், தத்துவம், வரலாறு ஆகியவற்றை கல்லூரியில் பயின்றது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. "நீங்கள் ஓய்வே எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?" என்று கேட்கப்பட்ட பொழுது, "அரசியல்வாதிகள் எல்லாரும் நல்லவர்களாக ஆகிவிடுகிற நாளோடு நான் ஓய்வு பெற்றுவிடுவேன். அது எப்பொழுதும் நடக்காது இல்லையா?" என்று கண்சிமிட்டிய அவர் அரசியல்வாதிகள் ஒரே மாதிரி செயல்பட்டுத் தன்னைச் சலிப்புக் கொள்ளச் செய்வதாகப் புலம்பினார். அவருக்கு ஆறுதலாக அவ்வப்பொழுது வித்தியாசமாக எதையாவது செய்து கொண்டிருந்த இருவர் லாலுவும், ஜெயலலிதாவும் தான்! ![]() விவாசய நிலங்கள் மீதான உச்சவரம்பை அரசு நீக்கியது என்கிற செய்தி மேலே எழுதப்பட்டு இருக்கும். விவசாயியின் தலை மீது பெரிய கல் ஸ்லாப் இறக்கப்படும். அதன் மீது அரசியல்வாதி வெற்றி பெருமிதத்தோடு அமர்ந்து இருப்பார். இப்படி மக்களின் வலிகளை உணராதவர்களைப் பேனா முனை கொண்டு குத்தி கிழித்தவர் அவர். மென்மையாக, சிரிக்கவைத்தபடியே அந்த அறுவை சிகிச்சை ஐம்பது வருடங்கள் நடந்தது. சாதாரண மனிதனை கவனப்படுத்திக் கொண்டே இருந்த அவருக்கு அஞ்சலிகள்! |