Thursday, August 7, 2014

நஷ்டம் ஸம்ஸ்க்ருதத்திற்கு அல்ல!

நஷ்டம் ஸம்ஸ்க்ருதத்திற்கு அல்ல!
ஏ. பீட்டர், காளையார்கோவில்
கே: ‘பள்ளிகளில் ஸம்ஸ்க்ருத வாரம் கொண்டாட வேண்டும்’ - என்ற மத்திய அரசின் உத்திரவு எதைக் காட்டுகிறது? இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாரே?
ப: ஸம்ஸ்க்ருதம் பாரதத்தின் தொன்று தொட்ட பழமையான மொழிகளில் ஒன்று. இரண்டு இதிஹாசங்கள், பல புராணங்கள், காளிதாஸன் போன்ற கவிஞர்களின் காவியங்கள், நாடகங்கள் மட்டுமில்லாமல், ஜோதிட சாஸ்திரம், ஆயுர்வேதம் என்ற மருத்துவ சாஸ்திரம் போன்றவையும் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன. ஆரியபட்டா, பாஸ்கராச்சாரியா போன்றவர்களின் விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளும், அதன் மூலமாக உலகிற்குக் கிட்டிய பாடங்களும் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன. கம்ப்யூட்டருக்குக் கூட மிகவும் உதவக் கூடிய மொழி இது என்று ஜெர்மானிய அறிஞர்கள் பாராட்டும் மொழியாகவும் ஸம்ஸ்க்ருதம் இருக்கிறது. இந்தியாவின் எல்லா மொழிகளுடனும் அதற்குத் தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் ஹிந்து பத்திரிகையில் வெளியான கடிதத்தில் ஒருவர், ‘மற்ற எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதைக் குறிப்பிட்ட மக்களுடனோ, நிலப் பரப்புடனோ பார்க்கக் கூடிய தன்மை இருக்கும். ஆனால் ஸம்ஸ்க்ருதத்திற்கு அம்மாதிரியான எல்லைகள் கிடையாது. ஏனென்றால், அது உலகளாவிய மொழி’ என்றிருக்கிறார். ஸம்ஸ்க்ருதம் என்றால் ஏதோ ஒரு இனத்திற்கோ, பூமியின் ஒரு பகுதிக்கோ சொந்தமானது என்று அர்த்தம் கிடையாது. ‘நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானது’ என்றுதான் அதற்கு அர்த்தம். இந்த மொழிக்கு ஒரு சிறப்புச் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு யாரோ ஸம்ஸ்க்ருத வாரம் கொண்டாடும் யோசனையை முன் வைத்திருக்கிறார்கள். அதை மத்திய அரசும் ஏற்றிருக்கிறது. இப்படி குறிப்பிட்ட வகையில் கொண்டாட்டம் நடத்தினால்தான் ஸம்ஸ்க்ருதத்திற்குப் பெருமை கிட்டும் என்றோ, அதனால் அம்மொழிக்குப் பலன் கிட்டும் என்றோ யாரும் சொல்ல முடியாது. கொண்டாடினாலும், கொண்டாடா விட்டாலும் அதன் அழியாத இலக்கியச் செல்வங்கள் அப்படியேதான் இருக்கப் போகின்றன. அதற்கு கொண்டாட்டம் என்பது எவ்வளவு தூரம் அவசியம் இல்லையோ, அதே மாதிரி கொண்டாட்ட எதிர்ப்பும் அவசியமில்லை. ஸம்ஸ்க்ருத வாரத்தைக் கொண்டாடினால் அதனால் வேறு எந்த மொழியும் பாதிக்கப்பட்டுவிடாது. தமிழ்நாட்டிலேயே கூட சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதத்திற்குப் பதிலாக பிரெஞ்ச் வாரம், ஜெர்மன் வாரம் என்று ஏதாவது மொழியின் வாரத்தைக் கொண்டாடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தால் அதற்கு எதிர்ப்பே இருந்திருக்காது. அயல்நாட்டு மொழிகளுக்குக் கொடுக்கும் மரியாதையை ஸம்ஸ்க்ருதத்திற்கு நம்மால் கொடுக்க முடியவில்லை என்றால், அதனால் ஏற்படக் கூடிய நஷ்டம் ஸம்ஸ்க்ருதத்திற்கு அல்ல. - Cho Ramaswamy in Thuglak